காமிரா கண்கள்

சாய்ப்ரியா

Staff Writer

நாடு முழுக்க அலைந்து புகைப்படங்கள் எடுத்துக்கொண்டே இருக்கிறார் சென்னையைச் சேர்ந்த சாய் ப்ரியா. அதற்காக தான் பார்த்த ஐடி வேலையையும் துறந்துவிட்டார். ‘எம்.எஸ்.சி படிப்பு முடிச்சுட்டு பெங்களூர்ல வேலை பார்த்தேன். அங்கே ஒருமுறை ட்ரெகிங் போனப்ப மத்தவங்க படங்கள் எடுத்ததைப் பார்த்து எனக்கும் புகைப்படங்கள் எடுக்க ஆர்வம் வந்துச்சு. காமிரா வாங்கி முறைப்படி படங்கள் எடுக்க ஆரம்பித்தேன். ஒருகட்டத்தில் குழுக்களுடன் சேர்ந்து பயணம் செய்து படங்கள் எடுப்பதில் சிரமங்கள் இருந்தன. இப்ப நானே எனக்கு சரிப்பட்டு வர்றமாதிரி பயணங்களைத் திட்டமிட்டு கிளம்பிவிடுகிறேன்'' என்கிற ப்ரியாவுக்கு பயணங்கள் சார்ந்த புகைப்படங்கள் எடுப்பதில் ஆர்வம் அதிகம். ‘‘ராஜஸ்தான் மாநிலத்தில் சமீபத்தில் அலைந்து திரிந்து படங்கள் எடுத்த அனுபவம் மிகவும் கடினமான ஒன்று. அப்புறம் கும்பமேளாவில் படம் எடுக்கப்போனபோது ஒரு நாள் முழுக்க தண்ணீரிலேயே நின்று படங்களை எடுத்தேன். ஏனெனில் வெளியே வந்தால் திரும்ப உள்ளே போகமுடியாத சூழ்நிலை.'' என்கிற ப்ரியா கேரளாவில் படகு போட்டி, தமிழகத்தில் ஜல்லிக்கட்டு, ராஜஸ்தானில் புஷ்கர் குதிரைச் சந்தை என்று புகைப்பட வாய்ப்புகளைத் தரும் அனைத்து பாரம்பரிய நிகழ்வுகளையும் பதிவு செய்துள்ளார். வண்ணம் நிறைந்த ஓவியங்களைப்போல அழகுடன் புகைப்படங்கள் மிளிர்வது இவரது சிறப்புத் திறன்!

ஏப்ரல், 2015.